Friday, September 09, 2005

வன்னியின் வளம் -பேராறு.

பேராறு.
இதுதான் முத்தையன் கட்டுக்குளத்துக்கு நீர் வழங்கும் முதன்மையான ஆறு என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் நான் குளத்திலிருந்து வெளியேறும் பேராற்றைத்தான் இதுவரை பார்த்திருக்கிறேன். குளத்தின் மற்றத் தொங்கலில் நீரைக் குளத்துக்கு வழங்கும் பேராற்றைக் காணும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

இந்தப் பேராறு இறுதியில் முல்லைத்தீவின் நந்திக்கடலுடன் சேர்கிறது. யாழ்ப்பாணத்திலிருக்கும் வரை பெரிய குளங்களையும் பெருக்கெடுத்தோடும் ஆறுகளையும் கனவிற்கூடக் கண்டதில்லை. ஆனால் பேராற்றை முதன்முதல் பார்த்தபோது ஆச்சரியப்பட்டேன். அப்போது அதில் நீர் அவ்வளவாக இல்லை. ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியை பேராறு குறுக்காக ஊடறுத்துச் செல்கிறது. அதைப் பேராற்றுப்பாலம் என்று சொல்வர்.

அந்த இடத்தில் குறைந்தது 30 அடி ஆழமாவது இருக்கும். மக்கள், மாரியில் பேராறு இந்தப் பாலத்தின் மேலாகப் பாயுமென்று சொல்வர். நான் நம்பவில்லை. ஆனால் ஒரு மாரியில், பேராறு பெருக்கெடுத்துவிட்டதென்று கேள்விப்பட்டு அடை மழைக்குள்ளால் நீண்டதூரம் சைக்கிள்மிதித்து பேராற்றுப் பாலம் வந்து அந்தப் பெருக்கெடுப்பைக் கண்டுகழித்தேன். அப்போதெல்லாம் படமெடுத்துவைப்பதைப்பற்றி யார் யோசித்தது?

தண்ணி வடிந்து முடிய பேராற்றின் கரையில் நிற்கும் பாரிய மருதமரங்களின் கொப்புகளில் ஒன்றிரண்டு ஆடோ மாடோ இறந்தநிலையில் செருகுப்பட்டிருக்கும்.


பேராற்றைச் சுற்றியிருக்கும் பென்னம்பெரிய மருத மரங்கள், அதன்மேல் தங்கியிருக்கும் வெளவால்கள் எனக்குப் பிடிக்கும்.

பேராற்றுத்தண்ணி தூய்மையாக இருக்கும். கோடையில் மிகமிகத் தெளிந்த நீர் கண்ணாடிபோலிருக்கும். இங்கே ஒஸ்ரேலியாவில் கலங்கிய சேற்றுத்தண்ணியைக்கூட அணைகட்டி அதை ஒரு பொழுதுபோக்குப் பூங்காவாக்கி வைத்திருக்கிறார்கள். இதைப் பார்த்தபோது எனக்கு வன்னியின் தெளிந்த, கவனிப்பாரற்ற பேராறு ஞாபகம் வரும்.

படஉதவி: கருணா.

Comments on "வன்னியின் வளம் -பேராறு."

 

said ... (September 10, 2005 1:36 AM) : 

//இங்கே ஒஸ்ரேலியாவில் கலங்கிய சேற்றுத்தண்ணியைக்கூட அணைகட்டி அதை ஒரு பொழுதுபோக்குப் பூங்காவாக்கி வைத்திருக்கிறார்கள். இதைப் பார்த்தபோது எனக்கு வன்னியின் தெளிந்த, கவனிப்பாரற்ற பேராறு ஞாபகம் வரும்.//

;-))

 

said ... (September 10, 2005 2:19 AM) : 

நானும் முத்தயன் கட்டு குளத்தை பார்த்திருக்கிறேன். வருடம் பூராகவும் நீர் பாசனத்துக்கு உதவக்கூடிய குளத்தின் நீர் அதன் உச்சப்பயன் பாட்டை பெறாது வீணே ஓடிக்கொண்டிருப்பது வருத்தததை தந்தது. பேராற்று பாலம் பாக்கா கிடைக்கலை
:(

 

said ... (September 10, 2005 3:39 PM) : 

தெரியாத விசயங்களை அறியத் தந்ததுக்கு நன்றி.

-விமலன்

 

post a comment