Thursday, January 10, 2008

நாங்களும் கடற்கரை போனோம் - பாகம் இரண்டு

அவுஸ்திரேலியாவின் புகழ்பெற்ற சுற்றுலாவுக்கான இடங்களிலொன்று Great Ocean Road.
இது விக்ரோரிய மாநிலத்தில் அமைந்துள்ளது. மெல்பேண் நகர்ப்பகுதியிலிருந்து அண்ணளவாக ஒன்றரை மணிநேர வாகனப்பயணத் தூரத்தில் இது தொடங்குகிறது.
பெயருக்கேற்றமாதிரி இதுவொரு கடற்கரைச் சாலை. இச்சாலை சில நூறு கிலோமீற்றர்கள் நீளத்தைக்கொண்டது. இச்சாலையின் வழியே ஏராளமான சுற்றுலாத்தளங்களுள்ளன. முக்கியமானவை கடற்கரைகள்தாம். இச்சாலையில் புகழ்பெற்ற பல கடற்கரைகளுள்ளன என்றாலும் இதன் நீளம் முழுவதும் ஏதாவதோர் இடத்தில் மக்கள் கடற்குளித்துக்கொண்டுதானிருப்பார்கள். இச்சாலை வழியே சுற்றுலா செல்வதாயின் முழுவிடங்களும் பார்க்க வேண்டுமானால் அண்ணளவாக நான்குநாட்களாவது தேவை. ஆங்காங்கே விலையுயர்ந்த தங்குமிட வசதிகளுள்ளன.

[சில தமிழ்ச்சினிமாப் படங்களில் இச்சாலையிலுள்ள சில சுற்றுலாத்தளங்கள் இடம்பெற்றிருக்கின்றன. நாங்கள் போவதற்கு இரண்டுநாட்களின் முன்பு சிலம்பரசன் ஒரு பாடற்காட்சியைப் படமாக்கினார்.]

கடந்த ஐந்தாம்நாள் நாம் இந்தக் கடற்கரைச்சாலையின் குறிப்பிட்ட தூரம்வரை சென்றிருந்தோம்.
இச்சாலையிலுள்ள ஐந்தாறு கடற்கரைகரைகளில் தங்கினாலும் மிகப்புகழ்பெற்ற கடற்கரையொன்றான Lorne கடற்கரையில்தான் குளித்தோம்.

நாம் முதலிற் சென்றது ஒரு நீர்வீழ்ச்சிக்கு.
இது Lorne கடற்கரைக்கு நேராக காட்டுக்குள் பத்து கிலோமீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ளது. கோடைகாலமாதலால் நீர் அதிகமில்லை. ஆனால் நீர்வீழ்ச்சியில் நேரடியாக நின்று குளிப்பதற்கு ஏதுவாக இருந்தது. இப்படம் நீர்வீழ்ச்சியிலிருந்து நூறுமீற்றர் தூரத்திலிருந்து எடுக்கப்பட்டது.


நாங்கள் நீர்வீழ்ச்சியில் நேரடியாக நின்று குளித்ததைக் கண்ட அவுஸ்திரேலிய நண்பர்கள் தாங்களும் வந்து கலந்துகொண்டனர். குளித்துவிட்டு வெளியேறும் அவர்களின் படத்தை மட்டும் இங்குக் காணலாம்.



நீர்வீழ்ச்சியில் கிட்டத்தட்ட ஒருமணித்தியாலம் வரை செலவிட்டபின் கடற்கரைக்கு வந்தோம்.

நாங்கள் பயணம் மேற்கொண்டது 05.01.2008 சனிக்கிழமை. அன்று வெப்பநிலை 38 தொடக்கம் 40 பாகை செல்சியஸ் வரை இருந்தது. எனவே எதிர்பார்த்தபடி மக்கள் வெள்ளம் கடற்கரையில் கரைபுரண்டோடியது.
ஊரில் நடக்கும் தேர்த்திருவிழா (நன்றி: யோகன் பாரீஸ்) போன்றிருந்த இடங்களைத் தவிர்த்து சற்று சனசந்தடி குறைந்த இடத்தை எமது குளிப்புக்காகத் தேர்ந்தெடுத்தோம்.
எம்மைத் தவித்து, அவ்விடத்துக் காட்சிகள் சில படங்களாகத் தரப்பட்டுள்ளன.












கடற்குளிப்பு முடிந்ததும் BBQ போட்டோம். நாங்கள் ஒழுங்காகச் சாப்பிட்டோமோ இல்லையோ சுற்றியிருந்தவர்களை எழுந்து ஓடவைத்துவிட்டோம். வேறொன்றுமில்லை, எமது மசாலாத்தூள், மிளகாய்த்தூள், இன்னிபிற சமாச்சாரங்கள் எரிந்த மணத்தால் வந்த வினை.

திரும்பிவரும்போது நாலைந்து கடற்கரைகளில் நின்று வேடிக்கைபார்த்து வந்தோம். இறுதியில் இரவு ஒன்பது மணியளவில் Geelong கடற்கரையில் காலாற நடந்துவிட்டுத் திரும்பினோம்.
கூட வந்த நண்பனொருவனுக்கு நீர்வீழ்ச்சியடியில் பல்லும் சொண்டும் உடைந்த சம்பவத்தை விட்டால் இனிதான, நிறைவான பயணம்.
~~~~~~~~~~~~~~~~~~
இங்குள்ள படங்கள் யாவும் என்னால் எடுக்கப்பட்டவை. எனவே படங்களில் என்னைத் தேடவேண்டாம்.

Labels: , , ,