Wednesday, September 21, 2005

பனைவேலி

யாழ்ப்பாணத்தில் பனைகள் ஏராளமாயிருந்தன. (இப்போது இல்லை. ஏராளமான மரங்கள் அழிக்கப்பட்டுவிட்டன.) ஆனால் எங்குமே சீரானமுறையில் வரிசையாக நட்டுவளர்த்த பனைமரங்களை நான் பார்த்ததில்லை. எல்லாமே தன்பாட்டுக்கு வளர்ந்தவை தாம்.

தொன்னூறுகளின் தொடக்கத்தில் "2000 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இரண்டுகோடிப் பனைகள்" என்ற திட்டத்தை விடுதலைப்புலிகள் முன்வைத்தார்கள். அதன்படி தமிழீழப்பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தால் அங்காங்கே ஆயிரக்கணக்கில் பனம்விதைகள் நடப்பட்டு அவை பராமரிக்கப்பட்டன. (அதுக்கென்ன பெரிய பராமரிப்பு. முளைக்காத விதைகளை அகற்றி புதுசா விதைக்கிறதுதான்).

யாழ்.வல்வை வெளியில் இப்படி ஆயிக்கணக்கான விதைகள் நடப்பட்டன. அதேபோல் கல்லுண்டாய் வெளியிலும் ஆயிரக்கணக்கான விதைகள் நடப்பட்டன. அவை முளைத்து சிறுவடலியாக இருந்தபோது பார்த்தேன். அப்போதுதான் நான் வரிசைக்கிரமத்தில் நடப்பட்டிருந்த பனங்காணியை முதன்முதற் பார்த்தேன்.

வன்னிக்கு வந்தபோது வேலியில் கதியால்களுக்குப் பதிலாக பனைகள் நிற்பதைக் கண்டபோது சிரிப்புத்தான் வந்தது. நல்ல நேர்த்தியாக வளர்ந்திருக்கும். இதோ அப்படி பனைகள் வேலியாக நிற்கும் படமொன்றைப் பாருங்கள். இது முல்லைத்தீவிலுள் முள்ளியவளைக் கிராமத்திலெடுத்த படம்.எனக்கு இதைப்பார்த்து ஒரு ஞாபகம் வந்தது. இப்படி பனைகளை நட்டுவிட்டால் கதியால் அரக்கிற சண்டை வராதெல்லோ?
யாழ்ப்பாணத்தில எங்கயாவது இப்பிடி வேலியடைக்கப்பட்டிருந்தால் தெரிஞ்ச ஆக்கள் சொல்லுங்கோ.

இதோ முள்ளயவளையின்ர மேலதிக படங்கள் சில.


Monday, September 19, 2005

முத்தையன்கட்டுக்குளம்.

இது நான் வன்னியில் அதிகம் நேசித்த முத்தையன்கட்டுக்குளம்.
முதற்படத்தில் நீங்கள் பார்ப்பது அதன் அணைக்கட்டு. குளத்தின் நீர்ப்பரப்பின் நீளப்பாட்டுத் தோற்றம் படத்தில் தெரியவில்லை. மிகவிசாலமான நீர்ப்பரப்பைக் கொண்டது இக்குளம்.இரண்டாவது படத்தில் தெரிவது குளத்தின் வான்பாயும் கதவுகள். வான்பாயும் நேரத்தில் அணைக்கட்டுக்கும் மேலாக நல்ல உயரத்துக்கு நீர்த்துவாலைகள் எழும்பும். அக்கம்பக்கத்தில் மழைத்தூவானத்துள் நின்ற உணர்வைத்தரும். நீண்டதூரத்திலீருந்து பார்ப்பவர்களுக்கு இது ஒரு புகார்வடிவில் தெரியும்.

குளம் வான்பாய்கிறதென்றால் சுற்றுலா செல்வதுபோல மக்கள் சென்று பார்ப்பார்கள். வன்னியில் இரணைமடுக்குளமும் முத்தையன்கட்டுக்குளமும் வான்பாய்தலைப் பார்க்கப்போவதற்குப் பிரபலமானவை.


ஆனால் மிகப்பெறுமதியான இக்குளத்தின் கதவுகள் திருத்தப்படாததால் பெருமளவான நீர் எந்நேரமும் வெளியேறிக்கொண்டிருக்கும். அக்குளத்தின் அணைக்கட்டால் போய்வரும்போது மிகக் கவலையளிக்கும். ஒருநாளைக்கு மட்டும் இரண்டு லட்சம் லீற்றர் நீர் இக்குளத்திலிருந்து அநியாயமாக வெளியேறுவதாகக் கணக்கிடப்பட்டதுண்டு. அனால் நீருக்குப் பெருமளவு தட்டுப்பாடு நிலவாததால் இப்பிரச்சினை பெரிதாகத் தெரியவில்லைப் போலும். இதற்கு முக்கியகாரணம், பயிர்ச்செய்கை முழு அளவில் செய்யப்படாததே. இன்றும் இக்குளத்தின்கீழ் செய்கைபண்ணப்பட வேண்டிய நீறைய பிரதேசங்கள் செய்கைபண்ணப்படுவதில்லை.


இது வான்பாயும் நீர் விழுந்துஓடும் இடம். இப்போது படத்தில் தெரியும் நீர், தேங்கிநிற்கும் நீரன்று. மாறாக சேதமடைந்த கதவுகளுக்குள்ளால் வெளியேறி வீணாய்ப்போகும் நீர்.

வன்னியழகு -கிளிநொச்சி.

இது கிளிநொச்சியிலுள்ள உருத்திரபுரம் கிராமம். நூறுவீதமும் நெற்செய்கை பண்ணப்படுகிற வயல்களைக் கொண்டபகுதி. இரணைமடுவின் துணையுடன் நல்லசெழிப்பாகக் காட்சிதரும் உருத்திரபுரம் அறுவடை நெருங்கும் காலங்களில் மிக அழகாக இருக்கும்.-----------------------------------------------------------------------------------

இதுவும் கிளிநொச்சியிலுள்ள தட்டுவன்கொட்டி என்ற பகுதி. அனையிறவுக்கு அண்மையில் இருந்ததால் நீண்டகாலமாக மக்கள்குடியிருப்போ பயிர்ச்செய்கையோ இல்லாதிருந்த பூமி. இப்போது செழிப்புற்றுள்ளது.
தண்ணீரில் நிற்கும் வெள்ளையர்கள் அனேகமாய் வெளிநாட்டினராயிருக்க வேண்டுமென்று நினைக்கிறென்;-)


படங்கள்: அருச்சுனா இணையத்தளம்.

Thursday, September 15, 2005

வன்னியின் வனப்பு

இதோ இது என்ன இடமென்று உங்களால் ஊகிக்க முடிகிறதா?

ஆனையிறவு.
இந்தப்பெயரை எல்லோரும் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
இராணுவத்தின் பிடியில் அது இருந்தபோது அதன்வழியால் சென்றுவந்தவர்களின் அனுபவங்கள் அவ்வளவு நன்றாக இருக்காது.
அது புலிகளால் மீட்கப்பட்டபின்பு கூட அந்தப் பகுதியாற் சென்று வந்தவர்களுக்கு வெறும் வெட்டையும் சுட்டெரிக்கும் வெயிலும் மட்டுமே ஞாபகமிருக்கும்.


ஆனால் அதையெல்லாம் தாண்டி அந்த மண்ணில் இயற்கை அழகைப் படம்பிடித்துள்ளார்கள்.
ஆனையிறவுக்குள்ளால் சென்று வந்தவர்களுக்கு இப்படங்கள் ஆச்சரியமாயிருக்கலாம்.

இப்படியெல்லாம் அழகானதா ஆனையிறவு? என்று வியப்பதைவிட,
இப்படியெல்லாம் கூட அந்த இடத்தை அழகாகப் படமெடுக்க முடியுமா என்றே எனக்கு வியப்புத் தோன்றுகிறது.


இப்படத்தைப் பார்த்துவிட்டு ஒருவரிடம் தொடர்பு கொண்டு கேட்டேன்.
ஆம். பிறநாட்டுப் பறவைகள் வந்து 'பார்த்து விட்டுப் போகிறதாம்' ஆனையிறவை. (இறுதிப்படத்தில் 'ஆணை'யிறவென்று எழுதியிருந்தாலும் அது ஆனையிறவு தான்.)
அதைப் பார்க்கத்தான் கொடுத்து வைக்கவில்லை.

இப்படங்கள் போராளிகளால் எடுப்பட்டு அவர்களின் புகைப்படப்பிரிவு இணையத்தளமான அருச்சுனாவில் தொகுப்பட்டுள்ளன.
அவற்றிற் சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

குறிப்பு: இன்று ஆனையிறவு உப்பளம் மிகப்பெருமெடுப்பில் தொழிற்படுகிறது.வன்னியின் மிகமுக்கிய ஏற்றுமதியாக உப்புற்பத்தி விளங்குகிறது.

பூப்பூவாய்ப் பூத்திருக்கு.

பட உதவி: கருணா.

Saturday, September 10, 2005

முல்லைக் கடற்கரை

இது முல்லைத்தீவின் கடற்கரை.இராணுவ முகாமிருந்தபோது போடப்பட்ட முள்வேலி அப்படியே கறள் பிடித்திருக்கிறது.படத்துக்குக் காட்சிக் குடுத்துக்கொண்டிருக்கிறவர் ஆரெண்டு தெரியாது.விடுதலைப் புலிகளின் கடற்படையின் படகுகள் கடலிற் காட்டும் விளையாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் மக்கள்.
-----------------------------------------------

பட உதவி: கருணா.

Friday, September 09, 2005

வன்னியின் வளம் -பேராறு.

பேராறு.
இதுதான் முத்தையன் கட்டுக்குளத்துக்கு நீர் வழங்கும் முதன்மையான ஆறு என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால் நான் குளத்திலிருந்து வெளியேறும் பேராற்றைத்தான் இதுவரை பார்த்திருக்கிறேன். குளத்தின் மற்றத் தொங்கலில் நீரைக் குளத்துக்கு வழங்கும் பேராற்றைக் காணும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

இந்தப் பேராறு இறுதியில் முல்லைத்தீவின் நந்திக்கடலுடன் சேர்கிறது. யாழ்ப்பாணத்திலிருக்கும் வரை பெரிய குளங்களையும் பெருக்கெடுத்தோடும் ஆறுகளையும் கனவிற்கூடக் கண்டதில்லை. ஆனால் பேராற்றை முதன்முதல் பார்த்தபோது ஆச்சரியப்பட்டேன். அப்போது அதில் நீர் அவ்வளவாக இல்லை. ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு வீதியை பேராறு குறுக்காக ஊடறுத்துச் செல்கிறது. அதைப் பேராற்றுப்பாலம் என்று சொல்வர்.

அந்த இடத்தில் குறைந்தது 30 அடி ஆழமாவது இருக்கும். மக்கள், மாரியில் பேராறு இந்தப் பாலத்தின் மேலாகப் பாயுமென்று சொல்வர். நான் நம்பவில்லை. ஆனால் ஒரு மாரியில், பேராறு பெருக்கெடுத்துவிட்டதென்று கேள்விப்பட்டு அடை மழைக்குள்ளால் நீண்டதூரம் சைக்கிள்மிதித்து பேராற்றுப் பாலம் வந்து அந்தப் பெருக்கெடுப்பைக் கண்டுகழித்தேன். அப்போதெல்லாம் படமெடுத்துவைப்பதைப்பற்றி யார் யோசித்தது?

தண்ணி வடிந்து முடிய பேராற்றின் கரையில் நிற்கும் பாரிய மருதமரங்களின் கொப்புகளில் ஒன்றிரண்டு ஆடோ மாடோ இறந்தநிலையில் செருகுப்பட்டிருக்கும்.


பேராற்றைச் சுற்றியிருக்கும் பென்னம்பெரிய மருத மரங்கள், அதன்மேல் தங்கியிருக்கும் வெளவால்கள் எனக்குப் பிடிக்கும்.

பேராற்றுத்தண்ணி தூய்மையாக இருக்கும். கோடையில் மிகமிகத் தெளிந்த நீர் கண்ணாடிபோலிருக்கும். இங்கே ஒஸ்ரேலியாவில் கலங்கிய சேற்றுத்தண்ணியைக்கூட அணைகட்டி அதை ஒரு பொழுதுபோக்குப் பூங்காவாக்கி வைத்திருக்கிறார்கள். இதைப் பார்த்தபோது எனக்கு வன்னியின் தெளிந்த, கவனிப்பாரற்ற பேராறு ஞாபகம் வரும்.

படஉதவி: கருணா.

வன்னி வளம்.
இது வன்னியின் வளம் நிறைந்த முத்தையன்கட்டுக் குளத்தின் கீழான பயிர்ச்செய்கைப் பிரதேசம்.

பட உதவி: கருணா

Wednesday, September 07, 2005

தெரிந்தாற் சொல்லுங்கள்.

இப்படத்திலுள்ள பூ என்னவென்று சொல்லுங்கள் பார்ப்போம்.


பலருக்கு ஞாபகமிருக்குமென்று நினைக்கிறேன்.
அத்தோடு அப்பெயர் ஏன் வந்ததென்றும் சற்று விளக்கினால் நன்று.

சரிசரி, நேரமாயிட்டுது... போயிட்டு வாறன்.

Monday, September 05, 2005

குழந்தைகள்


ஜம்புக்காயுடன்.


குழந்தை குடைந்த ஜம்புக்காய்


அந்தநாள் ஞாபகம்.

**********************************************
இந்தப் படத்திலிருருப்பவர்களைக் குழந்தையென்று சொல்லலாமா என்று யாரும் கேட்கவேண்டாம்.
பத்துக்கிலோ துப்பாக்கியைத் தூக்கிச் சண்டை செய்பவனையே 'குழந்தைகள்' என்று விளம்பும் அறிஞர்களிடையில் எழுதும்போது இப்படித்தான் எழுத வேண்டும்.

பட உதவி: கருணா.

Saturday, September 03, 2005

சுழன்று எரிகிறது உன்பெயர்.

மாவீரனே!
உரமேறிக் கறுத்த
பனையின் காலாய்
ஊன்றி நிற்கிறது
உன் மரணம்.

இழந்த உடலிலிருந்து
சிறகடித்து வந்து
எங்கள்
இதயத்தில் உட்கார்ந்திருக்கிறது
உன் பெயர்.

நாங்கள்
ஒவ்வொருவராய்
சொல்லச் சொல்ல
உன் ஒற்றைப்பெயர்
இலட்சம் பெயராகிறது.

உனக்காக
ஏற்றி வைக்கப்பட்ட
தீபத்தின் நாக்கு
காற்றின் குரலெடுத்து
சுழற்றிச் சுழற்றி
சொல்கிறது உன் பெயரை.

உன் பெயர்
தெறித்து விழுகிறது
எங்கள் விளக்குகளிலும்
எதிரிகளின் உடல்களிலும்.

நீ இல்லாமல் போனாலும்
உம் பெயரில்லாமல்
எதுவும் இல்லை இங்கு.

பழநிபாரதி.

நன்றி- மண் -தை.2002
(கவிஞர் அறிவுமதியால் நடத்தப்படும் சஞ்சிகை.)

குழந்தைகள்


தனியாகவொரு நங்கை.


தமையனுடன் தங்கை.

பட உதவி: கருணா

வசந்தம் வரவேற்கிறது

ஏற்கெனவே ஒரு வலைப்பக்கத்தை வைத்திருந்தாலும் சில தேவைகளுக்காக இன்னொரு பக்கத்தை நிறுவ நினைத்தேன்.

அதுதான் வசந்தம் என்ற பெயருடன் வந்துள்ளது.

இவ்வலைப்பக்கத்துக்கு வந்த அனைவருக்கும் நன்றி.